பருவதமலை சுற்றியுள்ள சப்த கைலாய தலங்கள்

 நமது பர்வதமலையை சுற்றி நிறைய தலங்கள் உள்ளன. பர்வதமலை கலசப்பாக்கம் தொகுதிக்குள் வருவதால் கலசபாக்கம் தொகுதி உட்பட்ட அனைத்து சப்த தலங்களும் பருவதமலை சுற்றி உள்ள சப்த கைலாய தலங்களாக கருதப்படும். அந்த வகையில் ஏழு முக்கியமான தலங்கள் கலசப்பாக்கம் தொகுதிக்குள் வருகிறது. அவற்றை முழுமையாக பார்ப்போம். 

1.மண்டகொளத்தூர்

சப்த கைலாய தலங்கள் செய்யாற்றின் தென்கரையில் அழைந்துள்ள கோயில்கள். சப்த கைலாய தலங்களில் முதன்மையானது மண்டகொளத்தூர் இவ்வூரில் உள்ள இறைவனின் பெயர் தர்மநாதேஸ்வரர், அம்பாளின் பெயர் தர்மசம்வர்த்தினி ஆகும்.

 காமாட்சி அம்மன் சிவன் சிலையை அமைத்துப் பூஜித்த இத்தலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வந்து வணங்கினர் என்று நம்பப்படுகிறது. பாண்டவரில் மூத்தவரான தர்மரின் பெயரிலேயே இங்குள்ள சிவனுக்கு தர்மநாதேஸ்வரர் என்ற பெயரும் அம்மனுக்கு தர்மசம்வர்த்தினி என்ற பெயரும் வழங்கி வருகிறது. இவ்வூரில் பண்டைய காலத்தில் இருந்து வேதம் கற்ற ஆன்றோர்கள் வேதம் கற்பித்து வந்துள்ளனர்.

2.கரைப்பூண்டி

சப்த கைலாயங்களில் இரண்டாவது தலமான கரைப்பூண்டியில் அருள்மிகு பாலசுந்தரி சமேத சுறைகண்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சோழர்கள், விஜயநகர மற்றும் சம்புவராய மன்னர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். 

இக்கோயிலில் விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர்கள் தனித்தனி சந்நிதிகளில் அமைக்கப்பட்டுள்ளனர்.

3.தென்பள்ளிப்பட்டு

இவ்வூர் சப்த கைலாய தலங்களில் மூன்றாவது தலமாக அமைந்துள்ளது. சேயாற்றின் தென்கரையில் மகாவிஷ்ணு எழுந்தருளி காமாட்சி அம்மனுக்கு வழிகாட்டி அந்த புனித இடத்திலேயே பள்ளி கொண்ட பெருமாளாக திருத்தலம் கொண்டிருந்தார். ஆகவே இவ்வூர் தென்பள்ளிப்பட்டு எனப் பெயர் பெற்றது.

இவ்வூர் இறைவன் கைலாசநாதர் என்றதிருப்பெயருடனும் அம்மன் கனகாம்பிகை என்ற பெயருடனும் ஆலயத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இவ்வூரின் மற்றொரு சிறப்பு திருவண்ணாமலை ஈசான்ய மடத்தை நிறுவிய ஸ்ரீமத் ஞான தேசிக சுவாமிகளை குருவாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீ சபாபதி ஞானதேசிகர் சுவாமிகள் அவர்களின் பிருந்தாவனம் மற்றும் மடம் அமைந்துள்ளது.

 இப்பகுதியில் ரதசப்தமி ஆற்றுத்திருவிழா மிகவும் பிரபலமானது. அன்று திருவண்ணாமலையில் இருந்து வரும் உற்சவர் சந்திரசேகரும், கலசபாக்கத்தில் உள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரரும் இங்கு தீர்த்தவாரி கொள்கின்றனர்.

4.பழங்கோயில்

இது சப்த கைலாயங்களில் நான்காவது தலமாக அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் 'பழங்கோளூர்' என்று குறிக்கப்பட்டுள்ள இவ்வூர் பழமையான கோயில் உள்ள ஊர் என்ற பொருளில் பழங்கோயில் என மருவியுள்ளது. இவ்வூரில் பாலாம்பிகை " உடனுறை பலக்ராதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 5 நிலைகளுடன் அழகிய வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது.

 இச்சிவாலயம் முதலாம் கண்டராதித்த சோழன் செம்பியன் மாதேவியின் மகனான மதுராந்தகன் உத்தம சோழனால் பொ.ஆ.969-985 இல் கட்டப்பட்டது. இங்கு ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேக விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

5.நார்த்தாம்பூண்டி

சப்த கைலாயங்களில் தலமாகும் இத்தலத்தில் 5வது நாரதர் தவமிருந்ததைப் பற்றி கந்தபுராணம் குறிப்பிடுகின்றது. இங்கு இறைவன் கைலாயநாதர் என்ற திருப்பெயருடனும் இறைவி பெரியநாயகி என்ற திருப்பெயருடனும் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் கொத்தளத்து விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வேணுகோபால சுவாமி, வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

6.தாமரைப்பாக்கம்

ஈசன் இத்தலம் சப்த கைலாயத் தலங்களில் 6வது தலமாகும். இக்கோயில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு அம்பாள் திரிபுரசுந்தரி என்ற பெயருடனும் அக்னீஸ்வரர் என்ற திருப்பெயருடனும் அமையப் பெற்றுள்ளனர்.

 இவ்வாலயத்தில் உள்ள லிங்கோத்பர் ரூப உருவத்துள் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் சிவனும், அன்னமாக பிரம்மாவும், வராகமாக விஷ்ணுவும், சிவனின் அடிமுடி தேடியதை விளக்கும் சிறப்புமிக்க லிங்கோத்பவர் சிலை உள்ளது. 

இக்கோயிலில் வரலா வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகள் அமைந்துள்ளன. சித்திரமேழி பெரியநாட்டார் என்ற குழுவினர் அவ்வூரில் கொலைக் குற்றம் புரிந்த ஒருவனுக்குத் தண்டனையாக இக்கோயிலுக்கு தினமும் விளக்கெரிக்குமாறு தீர்ப்பு வழங்கியதாக கல்வெட்டு கூறுகின்றது.

7.வாசுதேவன்பட்டு

சப்தகைலாயத் தலங்களில் 7வது மற்றும் கடைசித் தலமாகும். வாசுதேவ ராஜா என்ற குறுநில மன்னன் இவ்வூரை ஆட்சி செய்து வந்ததாகவும் அம்மன்னன் பெயரிலேயே இவ்வூர் வாசுதேவன்பட்டு என்று அழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. 

இவ்வூரில் சௌந்தர்ய நாயகி உடனுறை பக்தவச்சலேஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். இங்குள்ள இறைவனுக்கு ஆட்கொண்டேஸ்வரர் என்றும், அம்பிகைக்கு அகிலாண்டேஸ்வரி என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இக்கோயிலில் சித்திரகுப்தன் மற்றும் விசித்திரகுப்தன் சந்நிதிகள் உள்ளன.

Post a Comment

Previous Post Next Post